• Latest News

    Powered by Blogger.
    Monday 19 January 2015

    காலப்‬ பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox)


    நவீன அறிவியல் நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு வளர்ந்துவிட்ட இன்றைய சூழ்நிலையிலும், அதை நோக்கிக் கேட்கப்படும் முக்கிய கேள்வியாக இருப்பது, "காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியுமா?" என்பதுதான். ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே கேட்கப்பட ஆரம்பித்த இந்தக் கேள்வி, இன்றுவரை கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஐன்ஸ்டைனின் 'சார்புக் கோட்பாடு' (Theory of Relativity) மூலம் ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கேள்வி, 'கால இயந்திரம்' (Time Machine) ஒன்றை உருவாக்கி, இறந்தகாலம், நிகழ்காலம் ஆகியவற்றிற்கு மனிதன் பயணம் செய்வதாகப் புனையப்பட்ட கதைகளையும், திரைப்படங்களையும் ஏராளமாக நமக்குத் தந்திருக்கிறது. ஆனால் நிஜத்தில் இன்னும் சாத்தியப்படவில்லை.
    இப்போ, அதே கேள்வியை மீண்டும் நமக்குள்ளே கேட்டுக் கொள்வோம். 'உண்மையிலேயே நாம் எதிர்காலத்திற்கோ, இறந்தகாலத்திற்கோ சென்றுவர முடியுமா?' அதற்கு 'முடியும்' என்றுதான் பதில் சொல்கிறது அறிவியல். மறுக்கவே முடியாத கணிதச் சமன்பாடுகள் மூலம், காலப் பயணம் சாத்தியமே என்று நிறுவுகிறது அறிவியல். இறந்த காலத்துக்கோ, எதிர்காலத்துக்கோ நம்மால் பயணம் செய்ய முடியும் என்று அறிவியல் சொல்கின்றது என்றால், 'நாம் ஏன் இன்னும் அந்தக் காலங்களுக்குப் பயணம் செய்யவில்லை?' என்ற கேள்வியும் நமக்கு எழுவது இயல்புதானே! இன்றுவரை நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடிய,வில்லையென்றால், அது சாத்தியமற்றது என்றுதானே அர்த்தமாகின்றது. நிகழ்காலத்தில் நம் கண் முன்னால் எல்லாமே நடந்து கொண்டிருக்கின்றது. ஆனால், நடந்து முடிந்து, இறந்து போன காலத்துக்கு நம்மால் மீண்டும் செல்லலாம் என்று யாராவது சொல்லும் போது, நம்ப முடியாமல் நமக்குள் ஒரு கேலிச் சிரிப்பொன்றுதான் வெளிப்படும். நேற்றைக்கோ, முந்தா நேற்றைக்கோ நம்மால் மீண்டும் செல்லலாம் என்று சொன்னால் அதை எப்படி நம்பமுடியும்? இறந்து போன மனிதரையும், இறந்து போன காலத்தையும் எப்படி நாம் திரும்பிப் பார்க்க முடியும்? கனவிலோ, கற்பனையிலோ அது சாத்தியமாகலாம். நிஜத்தில் அது எப்படிச் சாத்தியமாகும்?
    "இல்லை, நாம் நினைப்பது அனைத்தும் தவறு. அவையெல்லாம் சாத்தியம்தான்" என்று சொல்கிறது நவீன இயற்பியல். 'காலம்', 'வெளி' (Time, Space) ஆகிய இரண்டைப் பற்றியும் சரியாக நாம் புரிந்து கொள்ளாத வரையில், இவை சாத்தியமற்றவை என்றுதான் நினைத்துக் கொள்வோம். இவற்றைப் பற்றிப் புரிந்து கொண்டுவிட்டால், இவற்றின் சாத்தியங்களும் நமக்குப் புரிய ஆரம்பிக்கும். காலத்தினூடாகப் பிரயாணம் செய்வதற்கு நமக்குத் தேவையானது வேகம். சாதாரண வேகம் இல்லை, ஒளியின் வேகம். ஒளி அல்லது வெளிச்சம் எவ்வளவு வேகமாகச் செல்கிறதோ, அந்த வேகத்தை நாம் அடைய முடியுமானால், நம்மால் காலத்தினூடாகப் பயணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல். நேற்று மாட்டு வண்டியில் ஊர்ந்து சென்ற நம் வேகம், படிப்படியாகக் கார், விமானம், ராக்கெட் என்று வேகத்தில் இன்று அதிகரித்து நிற்கிறது அல்லவா? அதுபோல, நாளை ஒளியின் வேகத்திலும் நாம் பயணம் செய்யும் வேளையும் வரும். அப்போது, காலத்தினூடாக நம்மால் பிரயாணம் செய்ய முடியும் என்கிறது அறிவியல். ஒளியின் வேகம் என்பது ரொம்ப அதிகமெல்லாம் கிடையாது. வெறும் 3 இலட்சம் கிலோமீட்டர்கள் ஒரு செக்கனுக்கு. சரியாக வாசியுங்கள், ஒரு செக்கனுக்கு மூன்று இலட்சம் கிலோமீட்டர்கள் வேகத்தில் ஒளி பயணம் செய்யும். இதுவரை நம் அறிவின்படி, அதிக வேகமாகச் செல்லக் கூடியது ஒளிதான். ஒளியை விட வேறு எந்தப் பொருளும் வேகமாகப் பயணிக்க முடியாது என்கிறது இன்றைய அறிவியல். ஒருவேளை 'ஏதாவது ஒன்று' ஒளியின் வேகத்தை விட அதிக வேகத்தில் சென்றால், அல்லது அந்த 'ஏதாவது ஒன்று' நாமாக இருந்தால், நம்மால் எதிர்காலத்திற்குப் பயணம் செய்ய முடியும். "நடக்காத ஒன்றை, நடக்கும் என்று சொல்லி நம்மை ஏமாற்றப் பார்க்கிறது அறிவியல்" என்று நீங்கள் இப்போது நினைக்கலாம். ஆனால், எதிர்காலத்திற்குப் பயணம் செய்தவர்கள் நமக்கு முன்னே வாழ்கிறார்கள் என்பதை அறிந்தால் திகைத்துப் போவீர்கள்.
    உலகநாடுகளில் சில இணைந்து 'விண்கப்பல்' (The International Space Station - ISS) ஒன்றை விண்வெளிக்கு அனுப்பி வைத்தன. விண்வெளியை ஆராய விரும்பும் நாடுகள், தங்கள் அஸ்ட்ராநாட்டுகளை அங்கு அனுப்பி, பல நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வைக்கும். அங்கு செல்பவர்கள் மாதக் கணக்கிலும், வருடக்கணக்கிலும் கூடத் தங்கியிருந்திருக்கிறார்கள். இந்த விண்கப்பல் கிட்டத்தட்ட 415 கிலோ மீட்டர்கள் உயரத்தில், மணிக்கு 27600 கிலோமீட்டர்கள் வேகத்தில் பூமியைச் சுற்றி வருகிறது. இந்த வகையில் ரஷ்யாவைச் சேர்ந்த 'சேர்கை அவ்டேஜேவ்' (Sergei Avdeyev) என்னும் விண்வெளி ஆராய்ச்சியாளர், 747 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து தன் ஆராய்ச்சியை நடத்தியிருக்கிறார். அதாவது பூமிக்கு மேலே 747 நாட்கள், 27000 கிலோமீட்டர்கள் வேகத்தில் அவர் பூமியைச் சுற்றி வந்திருக்கிறார். அவர் செய்த அதிவேகப் பிரயாணத்தின் மூலம், பூமியில் வசிக்கும் நம்மைவிட 0.02 செக்கன்கள் எதிர்காலத்திற்குப் பயணம் செய்தவர் ஆகின்றார். நம்முடன் வாழ்ந்து வந்த அவர், நம்மைவிட குறுகிய நேரத்திற்கு எதிர்காலத்திற்கு பயணம் செய்திருக்கின்றார். அவர் எதிர்காலத்திற்குப் பிரயாணம் செய்த காலம், மிகமிகச் சிறிய காலமென்பதால் அதை அவராலோ, நம்மாலோ பிரித்தறிந்து காணமுடியவில்லை. ஆனாலும், அவர் எதிர்காலத்துக்குப் பயணம் செய்ததென்பது மட்டும் உறுதியானது. இப்போது யோசனை செய்து பாருங்கள். இன்றிருக்கும் விஞ்ஞான வசதிக்கு செக்கன்களில் எதிர்காலத்துக்கு பிரயாணம் செய்யக் கூடியதாக இருக்கும் போது, நாளை இன்னும் அதிக வேகத்தில் பயணம் செய்யும் நிலை நமக்கு நிச்சயம் ஏற்படுமல்லவா? அப்படிப் பயணம் செய்யும் போது, செக்கன் மணிகளாகி, மணிகள் நாட்களாக வாய்புள்ளதல்லவா? அதிக பட்சம் ஒரு நாள் அளவுக்கு ஒருவரால் எதிர்காலத்துக்கு பயணம் செய்ய முடிந்திருந்தால், நாளை குலுக்கப்பட இருக்கும் லாட்டரிச் சீட்டின் இலக்கங்களை அவரால் இன்றே சொல்ல முடியுமல்லவா? அல்லது நாளை மோட்டார் வாகன விபத்தினால் இறக்கப் போகும் ஒருவரை, இன்றே எச்சரித்துக் காப்பாற்ற முடியுமல்லவா? ஒரு நாள் காலப் பிரயாணம் என்றல்ல, ஒரு மணி நேரப் பயணம் செய்தாலே, அவரால் பல விபத்துகளைத் தடுத்து நிறுத்த முடியுமல்லவா? இவையெல்லாம் நம் கண்முன்னேயே சாத்தியமாகக் கூடிய ஒன்றாகத் தெரியவில்லையா? சரி, இன்று இது நமக்குச் சாத்தியமானதாக இல்லாவிட்டாலும், நம் எதிர்காலச் சந்ததியினருக்கு சாத்தியமாகலாம் அல்லவா? எதிர்காலத்திற்கு நம்மால் பிரயாணம் செய்ய முடியும் என்பதற்கு இது ஒரு முக்கிய உதாரணமாக இருக்கின்றது.
    மேலே சொல்லப்பட்ட வேகம் மேலும் மேலும் அதிகரித்து, ஒரு கட்டத்தில் ஒளியின் வேகத்தில் நாம் பிரயாணம் செய்ய ஆரம்பித்தால், நம்மால் எதிர்காலத்தின் எந்த ஒரு ஆண்டுக்கும் சென்று வரலாம் என்கிறது அறிவியல். ஆனால் இங்கு சொல்லப்பட்ட காலப் பிரயாணத்தின்படி, ஒளியின் வேகத்தை நாம் அடைந்தால் எதிர்காலத்துக்குச் செல்வதாகத்தான் இருக்குமேயன்றி, இறந்தகாலத்துக்குச் செல்வதாகாது. ஆனாலும் இறந்தகாலத்துக்கு வேறொரு விதத்தில் செல்வதற்குச் சாத்தியம் உண்டு என்கிறார்கள். அதற்கு அறிவியல் சுட்டிக்காட்டுவது 'புழுத்துளை' என்று சொல்லக் கூடிய 'வோர்ம்ஹோல்' (Wormhole) என்பதைத்தான். நமது சூரியக் குடும்பம், பால்வெளி மண்டலம் என அண்டவெளியில் உள்ள அனைத்து நட்சத்திர மண்டலங்களும், விரித்து வைக்கப்பட்டிருக்கும் தட்டையான பாய் போன்ற வடிவிலுள்ள வெளியில் (Space) அமைந்து காணப்படுகின்றன என்கிறது அறிவியல். நாம் இரவில் கண்ணை உயர்த்திப் பார்க்கும் போது, ஒரு கோள வடிவிலான வெளியில் நட்சத்திரங்கள் இருப்பது போல நமக்குத் தெரிந்தாலும், அவையெல்லாம் ஒரு தட்டையான வெளியில்தான் இருக்கின்றன். இந்தத் தட்டையான வெளி படத்தில் காணப்படுவது போல வளைந்த நிலையில் காணப்படுகிறது.
    வளைந்திருக்கும் நிலையில் காணப்படும் வெளியின் ஒரு இடத்திலிருந்து, மறு இடத்துக்கு புழுத்துளை மூலம் மிகச் சுலபமாகவும், விரைவாகவும் நாம் பயணம் செல்லலாம் என்று அறிவியல் கோட்பாடுகள் சொல்கின்றன. இந்தப் புழுத்துளை மூலம் பயணம் செய்வதனால் இறந்த காலத்துக்கும் நம்மால் பயணம் செய்ய முடியும் என்கிறார்கள். இவையெல்லாம் ஏதோ கட்டுக்கதையென நீங்கள் நினைக்கத் தேவையில்லை. அனைத்தையும் நவீன அறிவியல் பலவிதங்களில் ஆராய்ந்தே சொல்கிறது. "என்னதான் நிகழ்காலத்துக்கும், எதிர்காலத்துக்கும் நாம் பயணம் செய்யலாம் என்று அறிவியல் சொன்னாலும், உண்மையில் அவற்றிற்குச் சாத்தியம் உண்டுதானா?" என்று தர்க்க ரீதியில் ஒரு காரணத்தை முன்வைத்து இயற்பியலாளர்களளில் சிலர் குழப்பமடைகின்றனர். அவர்கள் முன்வைக்கும் அந்தக் காரணம், 'பாட்டனின் முரண்நிலை' என்று சொல்லக் கூடிய 'கிராண்ட்ஃபாதர் பாரடக்ஸ்' (Grandfather Paradox) என்பதுதான்.
    இப்போது, 'வோர்ம் ஹோல்' என்று சொல்லப்படும் 'புழுத்துளை' மூலமாகவோ அல்லது வேறு ஒரு வழியிலோ இறந்தகாலத்துக்கு நான் பயணம் செய்கிறேன் என்று வைத்துக்கொள்ளுங்கள். என் அப்பாவின் அப்பா அதாவது என் பாட்டன் இளைஞனாக இருக்கும் இறந்த காலத்துக்கு நான் பயணம் செய்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அங்கு ஏதோ ஒரு காரணத்திற்காக என் பாட்டனை நான் கொல்ல வேண்டிய நிலை வருகிறது என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி நானே, என் பாட்டனை இறந்த காலத்தில் கொன்றுவிட்டால், என் நிலையென்ன? என் பாட்டன் இளைஞனாக இருக்கும் போதே இறந்துவிட்டதால், என் அப்பா பிறந்திருக்க முடியாது. அதனால் நானும் பிறந்திருக்க முடியாது. நான் பிறந்திருக்க முடியாது என்றால், என் பாட்டனை நான் எப்படிக் கொன்றிருக்க முடியும்? பாட்டனை நான் கொன்றிருக்க முடியாது என்றால், என் தகப்பன் அவருக்குப் பிறந்து, நானும் பிறந்திருப்பேன் அல்லவா? அதனால் மீண்டும் நான் என் பாட்டனைக் கொல்வேன். இப்படி ஒரு வட்டச் சுற்றுப் போலச் சுழன்று கொண்டிருக்கும் உண்மை நிலையில் ஒரு முரண்பாடு தெரிகிறதல்லவா? இதையே 'பாட்டனின் முரண்நிலை' (Grandfather Paradox) என்கிறார்கள். இந்த முரண்நிலை போலவே இறந்த காலத்துக்கு பயணம் செல்லும் போது. நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நிகழ்காலத்துக்கு ஒரு முரண்நிலையை ஏற்படுத்தும். இதனால் இறந்தகாலத்துக்குப் பயணம் செய்வது சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
    அண்மைக் காலம் வரை, பாட்டனின் முரண்நிலைக் கொள்கைக்குப் பதிலளிப்பது மிகவும் கடிணமாகவே இருந்தது. அறிவியலின் அனைத்துச் சாத்தியங்களும், அவற்றை நிரூபனம் செய்யும் கணிதச் சமன்பாடுகளும் இறந்தகாலப் பிரயாணம் சாத்தியமே என்று அடித்துச் சொன்னாலும், இந்தப் பாட்டனின் முரண்நிலை அதை உடைத்தெறிகிறது. இதைச் சரிசெய்ய, இறந்த காலத்துக்கு நாம் பிரயாணம் செய்யலாம். ஆனால் அங்கு எந்த ஒரு மாற்றத்தையும் நம்மால் செய்ய முடியாது. கிட்டத்தட்ட ஒரு ஆவி போன்ற நிலையில் அங்கு நாம் இருப்போம் என்று ஒருவித மழுப்பலான பதிலும் இதற்குச் சொல்லப்பட்டது (நாம் ஆவியென்று நினைப்பவர்கள் எதிர்காலத்திலிருந்து இறந்த காலம் நோக்கி இங்கு வந்தவர்கள்தானோ, யாருக்குத் தெரியும்?). ஆனாலும் இவற்றிற்கெல்லாம் குவாண்டம் இயற்பியல் (Quantum Physics) ஏற்றுக் கொள்ளக் கூடிய பதிலைக் கொடுத்தது.
    குவாண்டம் இயற்பியல் சமீபத்தில் மிகவும் புரட்சிகரமான கருத்துகளை வெளியிட்டு வருகிறது. நாம் வாழும் அண்டம் (Universe) என்பது ஒன்றுதான் என்று நம்பிவந்த வேளையில், அண்டம் என்பது ஒன்றல்ல, பல அண்டங்கள் (Multiverse) உள்ளன என்றும், ஒவ்வொரு அண்டத்துக்கும் சமமான, ஒன்று போல இன்னுமொரு அண்டம் அதற்குச் சமாந்தமாக (Parallel Universe) இருக்கின்றது என்றும் குவாண்டம் இயற்பியல் சொல்கிறது. ஒன்றுக்கொன்று சமாந்தரமாக, ஒன்று போல அண்டங்கள் இருப்பதனால், ஒரே அண்டம் போலக் கோடிக்கணக்கான அண்டங்கள் இருக்கின்றன என்றும் குவாண்டம் இயற்பியல் கூறுகிறது. இதைப் பல கணிதச் சமன்பாடுகள் மூலமாகக் கோட்பாடு ரீதியாகக் குவாண்டம் இயற்பியல் உறுதி செய்கிறது (இவை பற்றி நான் ஏற்கனவே 'உயிர்மையில்' சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன்). அண்டங்கள் ஒன்று போலக் கோடிக்கணக்கில் இருக்கின்றன என்பது மட்டுமில்லாமல், அந்தக் கோடிக்கணக்காக இருக்கும் ஒவ்வொரு அண்டத்திலும், நமது பூமியும், அதில் வாழும் நாமும் இருந்து கொண்டிருக்கிறோம். அதாவது, நானும், இதை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் ஒவ்வொரு அண்டத்திலும் ஒவ்வொருவராக, கோடிக்கணக்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அண்டத்தில் வாழ்ந்து வரும் நமக்குள் ஏதோ ஒரு வகையில் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். இதை வாசிக்கும் போது, உங்களுக்குச் சிரிப்புத் தோன்றலாம். 'அறிவியல் என்ற பெயரில் நன்றாகக் கணக்கு விடுகிறார்கள்' என்றும் தோன்றலாம். ஆனால் நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் உலகில் உள்ள முதன்மை இயற்பியலாளர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டிருக்கும் கோட்பாடு இது. இந்தச் சமாந்தர அண்டங்கள், காலப் பிரயாணத்தில் எங்கு வந்து சேர்கிறது என்பதை இனி நாம் பார்க்கலாம்.
    மீண்டும் என் பாட்டன் இளைஞனாக வாழ்ந்து கொண்டிருந்த இறந்த காலத்துக்கு நான் காலப் பிரயாணம் செய்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்துக்குப் பயணம் செய்த நான் ஏதோ ஒரு காரணத்துக்காக என் பாட்டனைக் கொல்ல வேண்டி வருகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்படி ஒருவேளை நான் இறந்தகாலத்தில் என் பாட்டனைக் கொல்லும் முரணான செயலைச் செய்தேன் என்றால், என் பாட்டன் இறந்ததற்குப் பின்னர் நடைபெறும் செயல்கள் அனைத்தும், சமாந்தரமாக இருக்கும் வேறொரு அண்டம் ஒன்றில் தொடர்ந்து நடைபெற ஆரம்பிக்கும். அதாவது நான் இப்போ வாழ்ந்து கொண்டிருக்கும் அண்டத்தில் என் வாழ்க்கை அப்படியே மாறாமல் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். ஆனால் நான் என் பாட்டனை கொன்றுவிட்டதால், சமாந்தர அண்டத்தில் என் அப்பாவும், நானும் பிறக்காத இன்னுமொரு வாழ்வு தொடர்ந்து செல்லும். எந்த ஒரு முரண்நிலையும் இல்லாமல், காலத்தால் பிரயாணம் செய்யும் போது ஏற்படும் சிக்கல்கள் அனைத்தும் இந்தக் குவாண்டம் இயற்பியல் கொள்கையால் விடுவிக்கப்படுகின்றன. இதன் மூலம் எதிர்காலத்துக்கும், இறந்த காலத்துக்கும் காலப் பயணம் சாத்தியம்தான் என்று குவாண்டம் இயற்பியல் நிறுவுகிறது. குவாண்டம் நிலையில் உப அணுத்துகள்கள் (Subatomic Particles) ஒளியின் வேகத்தில் பயனிப்பது போல, மனிதனாலும் ஒருநாள் ஒளியின் வேகத்தில் பயணிக்க முடியலாம் என்று குவாண்டம் இயற்பியல் கோட்பாட்டு ரீதியாக நம்புகிறது.
    கால இயந்திரத்தினூடாக இறந்தகாலத்துக்கு நாம் பயணம் செல்வது சாத்தியமா? இல்லையா? என்னும் கேள்வி ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நான் சொல்லப் போகும் இந்தச் சாத்தியத்தையும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இது புரிந்தால், குவாண்டம் இயற்பியல் சொல்லும் சிக்கலான கோட்பாடுகளையும் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
    நான் சொல்லப் போவதைக் கற்பனை பண்ணிப் பாருங்கள். வெறும் கற்பனைதான். பூமியில் இருந்து ஐம்பது ஒளியாண்டுகள் தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு கோளை (கிரகம்) நாம் தேர்ந்தெடுத்து, அதில் மிக மிக மிகப் பிரம்மாண்டமான கண்ணாடியைப் பூமியைப் பார்க்கும்படி வைத்துவிட்டு வந்துவிடுகிறோம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். பின்னர் பூமியிலிருந்து பிரமாண்டமான ஒரு தொலைநோக்கிக் கருவி மூலம் அந்தக் கண்ணாடியைப் பார்க்கிறோம் என்றும் வைத்துக் கொள்ளுங்கள். அப்படிப் பார்க்கும் போது, நூறு வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த உங்கள் பாட்டன் சிறுவனாகக் கோலி விளையாடிக் கொண்டிருப்பது உங்கள் கண்களுக்குத் தெரியும். அதாவது நூறு வருடங்களுக்கு முன்னர் பூமியில் நடைபெற்ற இறந்தகாலத்தை நீங்கள் அந்தக் கண்ணாடியினூடாக நிகழ்காலமான இன்று பார்க்கலாம். என்ன புரிகிறதா?
    சரி புரியவில்லையா இதைப் பாருங்கள்.
    ஐம்பது ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ள கோளிலிருந்து ஒளி நம்மை வந்தடைய 50 வருடங்கள் எடுக்கும். அதனால், நாம் அந்தக் கோளைத் தொலை நோக்கிக் கருவி மூலம் பார்க்கும் போது, ஐம்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள கோள்தான் நமக்குத் தெரியும். இப்போது அந்தக் கோளில் ஒரு கண்ணாடியை வைக்கும் போது, அதில் நம் பூமியின் விம்பம் பிரதிபலித்துத் தெரிய வேண்டுமென்றால், பூமியில் இருந்து ஒளி அந்தக் கண்ணாடியைச் சென்றடைய ஐம்பது வருடங்கள் எடுக்கும். அதாவது பூமியில் உள்ள ஒருவரின் விம்பம் (பாட்டன்) அந்தக் கண்ணாடியை அடைய ஐம்பது வருடங்களும், அது கண்ணாடியில் பட்டுத் தெறித்து மீண்டும் பூமியில் உள்ள நம் கண்ணை அடைய மேலும் ஐம்பது வருடங்களுமாக மொத்தம் 100 வருடங்கள் எடுக்கும். இப்போ புரிகிறதா?
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: காலப்‬ பயணத்தில் பாட்டனைக் கொல்வது சாத்தியமா? (Grandfather Paradox) Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top