2014ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனை என்று எதுவும் நிகழ்த்தப்படவில்லை என்பதுதான் உண்மை. படங்களின் தயாரிப்புச் செலவு அதிகரித்ததுதான் இந்த ஆண்டின் மிகப் பெரும் சாதனை. சில முன்னணி ஹீரோக்களின் படங்களின் தயாரிப்புச் செலவு 100 கோடி வரையில் இருந்தது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று.
படங்களின் தயாரிப்புச் செலவிற்கு ஏற்றபடி அந்த முதலீட்டையும், குறைந்தபட்ச லாபத்தையும் சேர்த்துக் கணக்கிட்டால் ஒரு படம் 100 நாட்களைக் கடந்தால் மட்டுமே லாபத்தைத் தர முடியும் என்ற சூழல் உள்ளது. ஆனால், இந்த ஆண்டில் 100 நாட்களைக் கடந்து சாதனை புரிந்த படங்கள் என்பதை விரல் விட்டு எண்ணி விடலாம்.
இருந்தாலும் ஒரு சிலர் அவர்களுடைய திறமையாலும், புதிய முயற்சியாலும் நம்மை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள். அவர்களின் சாதனைகளை நாமும் அங்கீகாரித்தால்தான் தொடர்ந்து அவர்களும் நல்ல படைப்புக்களைக் கொடுப்பார்கள். அப்படிப்பட்ட சாதனையாளர்களில் முக்கியமான சிலரைப் பற்றிப் பார்ப்போம்...
தயாரிப்பாளர்கள்...!
இந்த ஆண்டு தனித்து படங்களைத் தயாரிப்பது ஒரு புறமிருந்தாலும், சில படங்களை தமிழ்நாடு உரிமைக்கு மொத்தமாக வாங்கி வெளியிட்ட வகையிலும், சில படங்களை முதல் பிரதியின் அடிப்படையில் தயாரித்து வெளியிட்ட வகையிலும் சில முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் சாதனை புரிந்துள்ளன.
அந்த விதத்தில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இந்த ஆண்டில் 'கோலி சோடா, இனம், மஞ்சப் பை, சதுரங்க வேட்டை, அஞ்சான்,” ஆகிய படங்களை வெளியிட்டது. இவற்றில் 'கோலி சோடா, மஞ்சப் பை, சதுரங்க வேட்டை' ஆகிய படங்கள் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. 'அஞ்சான்' படத்தால் ஏற்பட்ட மாபெரும் தோல்வியை மேலே சொன்ன படங்களும் அவர்களுடைய பெயரை நன்றாகக் காப்பாற்றி விட்டது.
எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்ட “மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கயல்” ஆகிய மூன்று படங்களுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. 'கயல்' படம் சில நாட்களுக்கு முன்னர்தான் வெளியாகியிருந்தாலும் முதல் வார வசூல் சிறப்பாக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால், வருடக் கடைசியில் இந்தப் படம் வெளிவந்திருந்தாலும் வெற்றிப் படங்களின் வரிசையில் இடம் பிடித்து விடும் என்கிறார்கள்.
யு டிவி மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியீட்டில் “அஞ்சான், நான் சிகப்பு மனிதன், சிகரம் தொடு' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் 'அஞ்சான்' படம் தவிர மற்ற இரண்டும் சுமாரான வெற்றியைப் பெற்றன.
விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி வெளியீட்டில் 'நான் சிகப்பு மனிதன், ஜீவா, பூஜை' ஆகிய படங்கள் வெளியாகி ஓரளவிற்கு வெற்றியைப் பெற்றன. 'ஜீவா' படம் நல்ல படம் என்ற விமர்சனத்தைப் பெற்றது.
மேலும், ஸ்டுடியோ க்ரீன், திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், வுண்டர்பார் பிலிம்ஸ், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற படங்களைத் தயாரித்து வெளியிட்டன.
இயக்குனர்கள்
இந்த ஆண்டில் கமர்ஷியல் ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்ற இயக்குனர்கள் என்று சொன்னால் வளரும் அல்லது அறிமுக இயக்குனர்களைப் பற்றித்தான் சொல்ல வேண்டும்.
'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது' என்ற தோல்விப் படத்தை சில ஆண்டுகளுக்கு முன் இயக்கிய ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் மிக மிகக் குறைந்த செலவில் தயாரித்து, இயக்கிய 'கோலி சோடா' படம் இந்த ஆண்டின் முதல் வெற்றி மற்றும் வசூல் படமாக அமைந்தது. அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு அடுத்து விக்ரம், சமந்தா நடிக்கும் 'பத்து எண்ணுறதுக்குள்ளே' என்ற படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது என்பது கூடுதல் தகவல்.
அடுத்து படத்தின் வசூல் மிகப் பிரமாதம் என்ற அளவில் இல்லையென்றாலும் ஓரளவிற்கு லாபத்தைக் கொடுத்த படமாக விளங்கிய 'ஜிகர்தண்டா' படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜைச் சொல்லலாம். அந்தப் படத்தை அவர் படமாக்கிய விதமும், ஓரளவிற்கே ரசிகர்களிடம் பரிச்சயமான பாபி சிம்ஹாவை மிரட்டலான ஒரு வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்க வைத்து ரசிகர்கள், திரையுலகினரில் பாரதிராஜா, ரஜினிகாந்த் உட்பல பலரை வியக்க வைத்து சாதனை படைத்தார். படம் கொரியன் படத்தின் காப்பி, அது இது என்று பேசப்பட்டாலும் திரையில் அவர் காட்டிய சினிமா மொழி நிச்சயம் பாராட்டுக்குரியது.
“பொல்லாதவன், ஆடுகளம், சிறுத்தை, எங்கேயும் எப்போதும், 3, நான் ராஜாவாகப் போகிறேன், எதிர் நீச்சல், உதயம் என்எச் 4, நய்யாண்டி” ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் இயக்குனராக அறிமுகமாகி முதல் படத்திலேயே யதார்த்த இயக்குனர் என்ற பெயரை வாங்கினார். அவரது இயக்கத்தில் வெளிவந்த 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படம் வசூலிலும் சாதனை புரிந்து 100 நாட்களைக் கடந்த படம் என்ற பெருமையைப் பெற்றது. அறிமுக இயக்குனராக அவரது சாதனை இப்போது மீண்டும் தனுஷ் நடிக்க உள்ள ஒரு புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கிக் கொடுத்துள்ளது.
மேலும் தாங்கள் இயக்கிய முதல் படத்திலேயே திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர்களாக டீகே (யாமிருக்க பயமே), அருண் குமார் (பண்ணையாரும் பத்மினியும்), ராகவன் (மஞ்சப் பை), ராம்குமார் (முண்டாசுப்பட்டி), நிர்மல் குமார் (சலீம்), வினோத் (சதுரங்க வேட்டை), ரமேஷ் (தெகிடி), ஆனந்த் சங்கர் (அரிமா நம்பி) ஆகியோரும் இருக்கிறார்கள்.
இசையமைப்பாளர்கள்
இந்த ஆண்டில் பல படங்களின் பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாக அமைந்ததென்றாலும் ஹிட், பரபரப்பை ஏற்படுத்திய விதத்தில் இமான், அனிருத் ஆகிய இருவர் முன்னணியில் இருக்கிறார்கள்.
இமான் இசையைமப்பில் இந்த ஆண்டு, “ஜில்லா, நினைவில்நின்றவள், ரம்மி, அமரா, தெனாலிராமன், என்னமோ ஏதோ, சிகரம் தொடு, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, கயல், வெள்ளக்கார துரை,” என 11 படங்களுக்கு இசையமைத்து அதிகப் படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் என்ற பெருமையைப் பெறுகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த 'ஜில்லா' படத்திற்கு இசையமைத்தார். மேலே குறிப்பிட்ட படங்களில் 'ஜில்லா, ரம்மி, என்னமோ ஏதோ, கயல், வெள்ளக்கார துரை' ஆகிய படங்கள் மற்ற படங்களை விட பாடல்களை ஹிட்டாக்கிய விதத்தில் முன்னணியில் இருக்கின்றன. இசையைப் பொறுத்தவரையில் சாதனையாளர் என்றால் இந்த ஆண்டில் இமானை முன்னணியில் குறிப்பிடலாம்.
அனிருத் இசையமைப்பில் “மான் கராத்தே, வேலையில்லா பட்டதாரி, கத்தி” ஆகிய படங்கள் வெளிவந்தன. இந்த மூன்று படங்களின் பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அறிமுகமான குறுகிய காலத்திலேயே விஜய் நடித்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு அனிருத்திற்குக் கிடைத்தது. அதன் பலனாக இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் மூலம் விரைவில் ஹிந்தியிலும் அறிமுகமாக உள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் 'குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் மூன்று படங்களின் பின்னணி இசையும், பாடல்களும் அவருக்கு நல்ல பாராட்டைப் பெற்றுத் தந்தது. வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் இவர்தான் முன்னணியில் இருக்கிறார்.
அதோடு இந்த ஆண்டின் அறிமுக இசையமைப்பளார்களில் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் ஜஸ்டின் பிரபாகரன். 'பண்ணையாரும் பத்மினியும்' படத்தில் அறிமுகமான இவர் அந்தப் படத்திலேயே இனிமையான பாடல்களைக் கொடுத்திருந்தார். படம் பெரிய வெற்றியைப் பெறவில்லையென்றாலும் இனி வரும் படங்களைப் பொறுத்து அவர் நிச்சயம் பேசப்படுவார்.
சமீபத்திய அறிமுகமாக 'பிசாசு' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ள அரோல் கொரேலி அந்தப் படத்தில் சிறப்பான பின்னணி இசையைக் கொடுத்து, நம்பிக்கையை ஏற்படுத்துபவராக உள்ளார். அடுத்தடுத்த படங்கள் அவருடைய திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் நல்ல இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது.
இளையராஜா ( ஒரு ஊர்ல, உன் சமையலறையில், மேகா) ஏ.ஆர்.ரகுமான் (கோச்சடையான், காவியத் தலைவன், லிங்கா) , யுவன்ஷங்கர் ராஜா (அஞ்சான், வானவராயன் வல்லவராயன், பூஜை, திருடன் போலீஸ்) , ஹாரிஸ் ஜெயராஜ் (இது கதிர்வேலன் காதல், யான்), ஜி.வி.பிரகாஷ்குமார் (நிமிர்ந்து நில், நான் சிகப்பு மனிதன், சைவம், இரும்பு குதிரை) உள்ளிட்ட பலர் இசையமைத்த படங்கள் இந்த ஆண்டில் வெளிவந்தது என்றாலும் 'ஹிட் பாடல்கள்' வரிசையில் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது இவர்களுடைய பாடல்கள் அதிகமாக இடம் பெறவில்லை.
நாயகர்கள்
இந்த ஆண்டில் விதார்த் நடித்து 'வெண்மேகம், பட்டய கிளப்பணும் பாண்டியா, ஆள், காடு” ஆகிய படங்களும், வைபவ் நடித்து “டமால் டுமீல், நீ எங்கே என் அன்பே, கப்பல்” ஆகிய படங்களும், விமல் நடித்து, “மஞ்சப் பை, நேற்று இன்று, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” ஆகிய படங்களும், விஜய் சேதுபதி நடித்து “ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், வன்மம்” ஆகிய படங்களும், விஷ்ணு விஷால் நடித்து 'முண்டாசுப்பட்டி, ஜீவா” ஆகிய படங்களும், விஜய் வசந்த் நடித்து 'என்னமோ நடக்குது, தெரியாம உன்னை காதலிச்சிட்டேன்” ஆகிய படங்களும், கிருஷ்ணா நடித்து 'யாமிருக்க பயமே, வானவராயன் வல்லவராயன்', ஆகிய படங்களும், சித்தார்த் நடித்து “ஜிகர்தண்டா, காவியத் தலைவன்” ஆகிய படங்களும்,விக்ரம் பிரபு நடித்து “அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்கார துரை” ஆகிய படங்களும், விஷால் நடித்து “நான் சிகப்பு மனிதன், பூஜை” ஆகிய படங்களும், விஜய் நடித்து 'ஜில்லா, கத்தி' ஆகிய படங்களும் வெளிவந்துள்ளன.
ஆக இந்த ஆண்டில், “விதார்த், வைபவ், விமல், விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், விஜய் வசந்த், விஷ்ணு விஷால், விக்ரம் பிரபு, விஷால், விஜய்” என 'வி' நடிகர்கள்தான் 2014 தமிழ் சினிமாவில் அதிகப் படங்களில் நடித்து ஆக்கிரமித்துள்ளார்கள்.
'நாய்கள் ஜாக்கிரதை' படம் மூலம் சில வருட இடைவெளிக்குப் பிறகு சிபிராஜ் மீண்டும் வெற்றிப் பாதையைத் தொட்டிருக்கிறார்.
'நான்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இந்த ஆண்டில் நடித்த 'சலீம்' படம் வெற்றிப் படமாக அமைந்தது.
முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், சூர்யா, ஆர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நடித்து ஒரே ஒரு படம்தான் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன், சிம்பு நடித்து ஒரு படமும் வெளியாகவில்லை.
நாயகிகள்
இந்த ஆண்டில் இஷாரா நடித்து “வெண்மேகம், பப்பாளி, சதுரங்க வேட்டை”, அருந்ததி நடித்து 'நேற்று இன்று, நாய்கள் ஜாக்கிரதை”, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து 'ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ்” ஆகிய படங்களும், ஆனந்தி நடித்து “பொறியாளன், கயல்”, மோனல் கஜ்ஜார் நடித்து 'வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு', சமந்தா நடித்து 'அஞ்சான், கத்தி', நந்திதா நடித்து “முண்டாசுப்பட்டியும், நளனும் நந்தினியும், ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி'' ஆகிய படங்களும், நயன்தாரா நடித்து 'நீ எங்கே என் அன்பே, இது கதிர்வேலன்', ஓவியா நடித்து 'புலி வால், யாமிருக்க பயமே', மகிமா நடித்து 'என்னமோ நடக்குது, மொசக்குட்டி”, லட்சுமி மேனன் நடித்து “நான் சிகப்பு மனிதன், மஞ்சப் பை, ஜிகர்தண்டா” ஆகிய படங்களும், பிரியா ஆனந்த் நடித்து “அரிமா நம்பி, இரும்பு குதிரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா”, ஹன்சிகா நடித்து 'மான் கராத்தே, அரண்மனை, மீகாமன்' ஆகிய படங்களும் வெளிவந்துள்ளன.
முன்னணி ஹீரோயின்களாக ஸ்ருதி ஹாசன் நடித்து 'பூஜை' படமும், அனுஷ்கா நடித்து 'லிங்கா' படமும், தமன்னா நடித்து 'வீரம்' படமும், காஜல் அகர்வால் நடித்து 'ஜில்லா' ஆகிய படங்களும் வெளிவந்தன.
இந்த ஆண்டில் வெற்றி பெற்ற நாயகிகளில் குறிப்பிட வேண்டியவர்கள், லட்சுமி மேனன், சமந்தா, நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ், ஹன்சிகா. இவர்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்கென ஒரு தனி பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்கள்.
அறிமுக நாயகிகளில், 'மெட்ராஸ்' கேத்தரின் தெரேசா, 'பொறியாளன், கயல்' ஆனந்தி, 'பிசாசு' பிரயாகா, 'மேகா' சிருஷ்டி டாங்கே, 'கப்பல்' சோனம் ப்ரீத் பஜ்வா, 'அமர காவியம்' மியா ஜார்ஜ், 'லிங்கா' சோனாக்ஷி சின்ஹா ஆகியோர் தொடர்ந்து நல்ல படங்களையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்த நடித்தால் வெற்றிகரமான நாயகிகளாக வலம் வருவார்கள்.
பல புதிய திறமை வாய்ந்த ஒளிப்பதிவாளர்கள், படத் தொகுப்பாளர்கள், நடன இயக்குனர்கள், சண்டைப் பயிற்சியாளர்கள், என பலர் அறிமுகமாகியும், பல அனுபவம் வாய்ந்தவர்களாலும் தமிழ்த் திரையுலகம் இந்த ஆண்டில் அதிகப் படங்களைக் கொடுத்த ஆண்டாக விளங்கி நிற்கிறது.
இன்னும் சரியான வழிகாட்டுதல்களுடனும், சரியான கதைகளுடனும், நல்நோக்கத்துடனும் தமிழ் சினிமா சிறந்த பாதையில் வழி போட்டால் 2015ம் ஆண்டிலாவது உலக சினிமாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்து விடலாம். அதற்கான முயற்சியில் சிலர் இறங்கியிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
இனி வரும் காலங்களில் இந்தியத் திரையுலகில் தமிழ் சினிமா தரத்துடன் தலை நிமிர்ந்து நிற்க ஆவன செய்யுங்கள் படைப்பாளிகளே...
0 comments:
Post a Comment