மேற்கு பெங்களூருவில், ஹொசகுட்டடஹல்லியில் ஜெ.ஜெ.நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் 8 வயது சிறுமியை அப்பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தகவல் பரவியது.
சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் உள்பட பொதுமக்கள் திரண்டனர். கூட்டம் கூடியதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் பள்ளியில் ஒழிந்து கொண்டார். அவரை கைது செய்யுமாறு பள்ளி முன் திரண்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக அப்பகுதிக்கு போலீஸார் விரைந்தனர். பள்ளியில் இருந்து வெளியே கொண்டு வரப்பட்ட ஆசிரியிரை பொதுமக்கள் சுற்றி வளைத்துக் கொண்டு சரமாரியாக அடித்து உதைத்தனர். இதில் அந்த நபரின் சட்டை கிழிந்து உடம்பில் காயங்கள் ஏற்பட்டன. கைது செய்யப்பட்ட நபரை பத்திரமாக காவல் வாகனத்தில் ஏற்ற போலீஸார் முற்பட்டனர். இதனால் பொதுமக்களுக்கும் போலீஸாருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் போலீஸ் கெடுபிடியை மீறியும் பொதுமக்கள் தாக்கத் தொடங்கினர். இதில் காவலர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து கூட்டத்தை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளையும் வீசினர். ஒருவழியாக அந்த நபர் காவல் வாகனத்துக்குள் ஏற்றப்பட்டார். இருப்பினும் தொடர்ந்து அந்த வாகனத்தின் மீது கற்களை வீசினர். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.
பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சில தீக்கிரையாக்கப்பட்டன. போலீஸ் வாகனம் ஒன்றும் தீக்கிரையானது.
சம்பவம் குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி கூறும்போது, "குற்றம்சாட்டப்பட்டவருக்கான தண்டனையை நீதிமன்றம் நிர்ணயிக்கும். மக்களே அதிரடியாக ஏதும் நடவடிக்கையில் இறங்கக் கூடாது" என்றார்.
கடந்த ஆண்டு, ஜூலை மாதம் விப்ஜியார் பள்ளியில் சிறுமி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கடந்த டிசம்பரிலும் பெங்களூர் தனியார் பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
0 comments:
Post a Comment