கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், ரூ.10 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக வைத்திருக்கவோ, வெளியில் எடுத்துச் செல்லவோ தடை விதிக்க வருமான வரித் துறை பரிசீலனை செய்து வருகிறது.
ஒரு தனி நபர், பணத்தை ரொக்கமாக வீட்டில் வைத்திருக்கவோ, வெளியில் எடுத்துச் செல்லவோ எவ்வித கட்டுப்பாடும் இல்லை. இதனால் அதிக தொகையை ரொக்கமாக வைத்திருக்கும் தனி நபர்களிடம் அதற்கான வருமான வழி குறித்து கேட்பது சிக்கலாக உள்ளது.
இந்நிலையில் கடந்த மக்கள வைத் தேர்தலின்போது கருப்புப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
இதற்கிடையே வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் முதலீடு செய்யப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) நியமித்தது.
இக்குழு கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு பரிந்துரைகளை உச்ச நீதிமன்றத்தில் கடந்த டிசம்பர் மாதம் சமர்ப்பித்தது.
இதன்படி, பணத்தை ஒரு தனி நபர் வீட்டில் வைத்திருக்கவோ, வெளியில் எடுத்துச் செல்லவோ உச்சவரம்பு நிர்ணயிப்பது குறித்து வருமான வரித்துறை ஆலோசித்து வருகிறது. அதாவது ரூ.10 லட்சத்துக்கு மேல் வைத்திருக்க தடை விதிக்கப்படலாம் என்றும் இதுகுறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுப்பாட்டை மீறினால் அந்தப் பணத்தை பறிமுதல் செய்வது குறித் தும், அபராதம் விதிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
பான் எண் கட்டாயம்
ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறும்போது நிரந்தர கணக்கு எண்ணை (பான்) தெரிவிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது. பான் எண் இல்லாதவர்கள் ஆதார் எண் உள்ளிட்ட அரசு ஆவணங்களை காட்டினால் ஏற்றுக்கொள்ளலாம் என்றும் அது தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment