இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்கும் விராட் கோலி, இந்திய அணியில் ஆக்ரோஷமான அணுகுமுறையை நிரந்தரமாக்குவார் என்று மிட்செல் ஜான்சன் புகழ்ந்துள்ளார்.
‘என்னை நீங்கள் வெறுப்பதை விரும்புகிறேன்’ என்று விராட் கோலி கூறினார். ஆனால் ஜான்சன் தற்போது அவரைப் புகழ்ந்து பேசியுள்ளார்.
இந்த டெஸ்ட் தொடரில் மிட்செல் ஜான்சனை அவர் நேருக்கு நேர் மட்டையாலும் வார்தைகளாலும் எதிர்கொண்டார். அதில் இதுவரை வெற்றியும் கண்டுள்ளார்.
“விராட் கோலி கேப்டன்சி சுவாரசியமாகவே இருக்கும். ஏனெனில் ஆக்ரோஷமான கிரிக்கெட் அணியாக இந்திய அணி அறியப்பட்டதில்லை. ஆனால், கோலி ஆடத் தொடங்கும் முதலே நான் பார்த்திருக்கிறேன், அவர் ஆட்டத்தில் பொறிபறக்கிறது.
எனவே இவர் நிச்சயம் ஒரு ஆக்ரோஷமான, தாக்குதல் தொடுக்கும் கேப்டன் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஃபீல்ட் செட் செய்யும் விதம் முதல் அனைத்தும் எதிரணியினரை நெருக்குவதாகவே அமையும், தோனி செய்ததைவிட மிகவும் வித்தியாசமான அணுகுமுறையை எதிர்பார்க்கலாம்.
அவர் போர்க்குணம் மிக்கவர், மைதானத்தின் அனைத்து விவகாரங்களிலும் தன்னுடைய இருப்பை விரும்புபவர்.
அவர் யாருக்கு எதிராக விளையாடுகிறோம் என்றெல்லாம் பார்ப்பதில்லை, முகத்துக்கு நேராகவே ஆக்ரோஷம் காட்டுகிறார். அப்படித்தான் அவர் கிரிக்கெட் ஆட்டத்தை விளையாட நினைக்கிறார். அதுதான் அவருக்கு பிடித்திருக்கிறது.
அவர் ரன்கள் குவித்து வருவதை எப்போதும் எங்களிடம் கூறிவருகிறார், நாங்கள் அவரிடம் 2-0 என்று முன்னிலை வகிக்கிறோம் என்று கூறுகிறோம். இது அவ்வளவுதான். இந்த விவகாரங்கள் ஆட்டத்தின் ஒருபகுதிதான்; இப்போதும் எப்போதும்.
0 comments:
Post a Comment