மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.
மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார். அங்கிருந்து நேரடியாக போயஸ் தோட்டத்துக்கு சென்ற அவர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 40 நிமிடங்கள் நடந்தன. இது, அரசியல் வட்டாரத்தில் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜெயலலிதா, இதுவரை எந்த முக்கியப் பிரமுகரையும் சந்திக்கவில்லை. அரசியல் உள்ளிட்ட எந்த பொதுநிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் இல்லத்தில் இருந்தபடியே புகைப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், முதன் முறையாக ஜெயலலிதாவை பாஜக மூத்த தலைவரும், நிதி அமைச்சருமான அருண்ஜேட்லி போயஸ் தோட்டத்துக்கு நேரில் சென்று சந்தித்துப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment