பன்றிக் காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் ஹெச்1 என்1 வைரஸுக்கு நாட்டின் பல மாநிலங்களில் பலர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
சமீபத்தில் பரவத் தொடங்கிய இந்நோய்க்கு தெலங்கானாவில் இதுவரை 27 பேர் பலியாகினர். மேலும், 10 சிறுவர்கள் உட்பட 35 பேர் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் ஒருவர் உயிரிழப்பு
இதனிடையே, சென்னையிலும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் ஸ்ரீநிவாசன் (58) என்பவர் உயிரிழந்தார். தமிழகத்தில் ஸ்ரீநிவாசன் என்பவரே பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்த முதல் நபர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநிவாசன் பன்றிக் காய்ச்சலில் பலியானதை உறுதி செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள், "ஸ்ரீநிவாசனுக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டது. அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். மருத்துவமனை அளித்த எச்சரிக்கையை மீறியும் அவர் சிகிச்சையை பாதியில் நிறுத்தியுள்ளார். பின்னர் அவர் இங்கு வரும்போது அவருக்கு நோய் மிகவும் முற்றியிருந்தது. எனவே, கிருமிகள் கட்டுப்படவில்லை. இதனால் அவர் உயிரிழந்தார்" என்றார்.
ஹைதராபாத்தில் பாதிப்பு
தெலங்கானாவில் இந்த ஆண்டு அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலர் உயிரிழந்ததாகவும் தெரிகிறது. ஹைதராபாத்தின் காந்தி மருத்துவமனையில் மட்டும் 27 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்போடு அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் புதிதாக 4 பேர் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் நிலவரம்
அதே போல, பஞ்சாப்பின் அமிர்தசரஸிலும் 55 வயதான சரப்ஜித் கவுர் என்பவர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவர் கடந்த 17-ந் தேதி தனியார் மருத்துவமனையிலிருந்து பஞ்சாப் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
சண்டிகரை தலைநகராக கொண்ட ஹரியானா - பஞ்சாப் மாநிலங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் இதுவரை 4 பேர் பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
மேலும், மத்தியப் பிரதேசம், ஒடிசா, தலைநகர் டெல்லி ஆகிய பகுதிகளிலும் பன்றிக் காய்ச்சலால் உயிரிழப்பு நேர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை பதிவு செய்துள்ளது.
மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தல்
பருவநிலை மாறும்போது, பன்றிக் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இது தொடர்பாக, மத்திய அரசு தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகிறது. மேலும், பன்றிக் காய்ச்சலை சமாளிக்க தயாராக இருக்குமாறு, அனைத்து மாநில மருத்துவமனைகளும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் மருத்துவமனைகள் உள்ளதால், பன்றிக் காய்ச்சல் குறித்து பீதியடைய வேண்டாம் என்றும் பன்றிக் காய்ச்சல் குறித்த அறிகுறி தோன்றினால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சோதித்துக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment