728x90 google

mobile

  • Latest News

    Powered by Blogger.
    Tuesday, 20 January 2015

    கண்களின் உள்ளே ஊடுருவும் கேமரா - அனிமேஷன் விந்தைகள்


    அனிமேஷன் திரைப்படத் தொழில்நுட்பத்தில் கற்பனையை விஞ்சும் அளவுக்கு அபாரமான எல்லைகளைத் தொட்டது டாய் ஸ்டோரி. இதனால் அனிமேஷன் படங்களும் அவற்றின் கதைகளும் குழந்தைகளுக்கானது மட்டுமே என்ற கருத்து இந்தப் படத்தால் நீர்க்குமிழி போல் உடைந்து சிதறியது.
    பெரியவர்களும் குழந்தைகளாக மாறி, தங்களது பால்ய நினைவுகளோடு படம் பார்க்கும் ஜாலத்தை பிக்ஸார் நிறுவனம் உருவாக்கி அளித்த டாய் ஸ்டோரியின் மூன்று பாகங்களும் சாத்தியமாக்கின.
    டாய் ஸ்டோரியின் முதல் பாகத்தில் பொம்மைகளின் உரிமையாளனாகிய சிறுவன் ஆண்டி( Andy) சுற்றுலா சென்றிருக்கும் சமயத்தில் அவனது கௌபாய் பொம்மை வுடிக்கும் (Woody), புதிதாக வந்துசேரும் விண்வெளி வீரன் பொம்மையான பஸ் லைட் இயருக்கும் (Buzz Light Year) நடக்கும் சண்டையும் சமாதானமும்தான் கதைக்களம்.
    இரண்டாம் பாகத்தில் கௌபாய் வுடி கடத்தப்படுவதும் அதைக் காப்பாற்ற மொத்த பொம்மை பட்டாளமும் கிளம்பிப் போய், பிரச்சினைகளில் சிக்கிக்கொள்வதும், இறுதியில் புதிய பொம்மைகளின் உதவியுடன் தப்பித்து திரும்பி வருவதும்தான் கதை.
    இரண்டாம் வெளியாகி 11 ஆண்டுகள் கழித்து கடந்த 2010-ல் வெளியானது மூன்றாம் பாகம். இது குழந்தைகளை மட்டுமல்ல, கல்லூரி மாணவர்களையும் கூட்டம் கூட்டமாகத் திரையரங்குகளுக்கு இழுத்து வந்தது. காரணம் பொம்மைகளின் உரிமையாளன் ஆண்டி மூன்றாம் பாகத்தில் கல்லூரிக்குச் செல்லும் மாணவனாக வளர்ந்திருந்தான்.
    அந்தக் கதாபாத்திரத்தைப் போலவே முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் உணர்வுபூர்வ ரசிர்களாக இருந்த சிறுவர்கள் நிஜவாழ்க்கையிலும் பள்ளியை முடித்துக் கல்லூரியில் காலடி வைத்த நேரத்தில் மூன்றாம் பாகம் வெளியானது.
    இதில் 17 வயதில் கல்லூரிக்குச் செல்லும் ஆண்டி, கடந்த சில ஆண்டுகளாகவே பொம்மைகளை வைத்து விளையாடவில்லை. அதேநேரம் தனது பொம்மைகளைத் தூக்கிப் போடவும் மனமில்லை. இதனால் தனக்கு மிகமிகப் பிடித்தமான கௌபாய் வுடியை மட்டும் தனது புத்தகப் பையில் வைத்துக் கல்லூரிக்கு எடுத்துச் செல்கிறான். அதேநேரம் தனக்குப் பிடித்த மற்ற பொம்மைகளான பஸ், ஜெஸ்ஸி உள்ளிட்ட சில பொம்மைகளை ஒரு அட்டைப் பெட்டியில் வைத்துப் பத்திரமாகப் பரணில் எடுத்து வைக்கிறான்.
    ஆனால் ஆண்டியின் அம்மாவோ இந்தப் பெட்டியைத் தவறுதலாக ‘சன்னி சைடு’ என்ற பகல்நேரக் குழந்தைகள் காப்பகத்துக்குக் கொடுத்துவிடுகிறார். முதலில் பஸ்ஸுக்கும் மற்ற பொம்மைகளுக்கும் சொர்க்கமாகத் தெரிகிறது இந்தக் காப்பகம். ஆனால் காப்பகம் காலையில் திறக்கப்பட்டதும் மூன்றுமுதல் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திமுதிமுவென்று நுழைந்து பொம்மைகளின் கை கால்களைத் திருகி உடைத்து வால்தனம் செய்ய ஆரம்பித்ததும் அமெரிக்காவின் கொடிய சித்திரவதைக் கூடமான ‘ கொண்டனாமோ’ சிறையைவிடக் கொடுமையானதாக நினைத்து பொம்மைகள் நடுங்குன்கின்றன.
    இதற்கிடையில் ஆண்டி வேண்டுமென்றேதான் தங்களை இப்படி தூக்கிப் போட்டுவிட்டதாக பஸ்ஸும் மற்ற பொம்மைகளும் நினைக்கின்றன. அவர்களின் இந்த எண்ணம் தவறு என்பதையும் தன் கை விட்டுப்போன பொம்மைகளைத் தேடி ஆண்டி வந்துகொண்டிருக்கிறான் என்பதையும் எடுத்துக் கூறி அவற்றைக் காப்பாற்ற வந்துவிடுகிறது கௌபாய் வுடி.
    ஆனால் அந்தக் காப்பகத்திலிருந்து எந்தப் பொம்மையும் தப்பித்துச் சென்றுவிடாதபடி பார்த்துக் கொள்கிறது அழகான வில்லன் கரடி பொம்மையான ’லாட்ஸ் -ஓ’(Lots-O). இந்தக் காப்பகத்திலிருந்து வுடி உதவியுடன் பஸ்ஸும் மற்ற பொம்மைகளும் தப்பித்துத் தங்கள் அன்புக்குரிய அண்ணன் ஆண்டியை அடையமுடிந்ததா என்பதுதான் மூன்றாம் பாகத்தின் விறுவிறுப்பான கதை.
    என்னதான் வில்லன் கரடி பொம்மை வந்தாலும் எந்தக் கதாபாத்திரத்தின் நோக்கமும் யாரையுமே தீயவர்களாகச் சித்தரிக்காத பாத்திரப் படைப்பும் முப்பரிமாணத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நுணுக்கமாகச் சித்தரித்த அனிமேட்டர்களின் அபாரமான உழைப்பும் 83-வது ஆஸ்கர் போட்டியில் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதை டாய் ஸ்டோரி 3க்குப் பெற்றுத் தந்தது.
    மூன்றாம் பாகத்தில் ஏராளமான புதிய பொம்மைக் கதாபாத்திரங்களை பிக்ஸார் உருவாக்கியது. உதாரணத்துக்குத் தனது கண்ணைத் தனியே கழட்டி வேவு பார்க்கும் உருளைக்கிழங்கு வடிவத் தலையைக் கொண்ட ‘மிஸ்டர் பொட்டெட்டோ ஹெட்’ பொம்மையை எடுத்துக் கொள்வோம். வெர்ச்சுவல் கேமரா இந்தப் பொம்மையின் கண்களுக்குள் புகுந்து
    புறப்பட்டு வரும்போது, நிஜக் கேமராவில் துளியும் சாத்தியமில்லாத அசாதாரண அற்புதத்தை அளிக்கும் இந்தக் காட்சி முப்பரிமாணத்தில் மட்டுமே சாத்தியம் என்று ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வாய் பிளந்தபடி ரசித்தார்கள். படம் முழுவதுமே வெர்ச்சுவல் கேமராவின் ஜாலம் பல சாகஸமான கேமரா கோணங்களைச் சாத்தியமாக்கிவிட்டது. முப்பரிமாண வெர்ச்சுவல் கேமராவின் அத்தனை சாத்தியங்களையும் விலாவாரியாகப் பார்ப்போம்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கண்களின் உள்ளே ஊடுருவும் கேமரா - அனிமேஷன் விந்தைகள் Rating: 5 Reviewed By: Unknown
    Scroll to Top