ரஜினியிடம் கேட்பதில் நியாயமில்லை என்று 'லிங்கா' விநியோகஸ்தர்களுக்கு எதிராக நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
'லிங்கா' படத்தை வாங்கி வெளியிட்ட வகையில் சிங்காரவேலன், சாய், ரூபன் மற்றும் திருச்சி, தஞ்சாவூர் தியேட்டர்கள் சார்பில் ரவிகணேஷ் ஆகியோருக்கு இழப்பு ஏற்பட்டதாக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து போலீஸ் அதிகாரிகள் ஜனவரி 10ம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்தனர்.
மேலும், "இப்பிரச்சினையில் ரஜினி தலையிட வேண்டும். ரஜினி தலையிட்டால் இந்தப் பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும் என்றுதான் சொல்கிறோம். ஆனால், ரஜினியிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை" என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
இப்பிரச்சினையில் ரஜினிக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பது:
"'லிங்கா' பட வசூல் குறைவாக உள்ளதாக தெரிவித்து, அதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடு செய்திட ரஜினிகாந்த் அவர்கள் தலையிட வேண்டும் என்று திரைப்படம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள்.
ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது, வசூலில் குறைவு ஏற்படுவது ரசிகர்கள் கையில் தான் இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாக அந்தத் திரைப்படம் யூகத்தின் அடிப்படையில் தான் விலைபேசி முடிக்கப்பட்டு திரையிடப்படுகிறது. எந்த ஒரு தொழிலிலும் லாப நஷ்டம் இரண்டும் உண்டு. அது போன்று தான் 'லிங்கா' திரைப்படம் மூலம் அதிக வசூல் கிடைக்கும் என்று எதிர்பார்த்து செய்த வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால், அதை அந்த படத்தின் கதாநாயக நடிகரிடம் கேட்பதை விட தயாரிப்பாளரிடம் அணுகி தங்கள் கோரிக்கையை சொல்லலாம்.
ஏன் என்றால், தங்கள் படத்தில் இவ்வளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து தாங்கள் எடுக்கும் படத்தின் விநியோகத்தை சலுகை செய்து எங்கள் இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்று வணிக ரீதியாக அணுகலாம் தவறில்லை. அதே சமயம், கதாநாயக நடிகரிடம் கேட்பதில் நியாயம் இருக்க முடியாது" என்று கூறியிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment